ராகுல்காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட அவருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. 13 கோடி பேர் உள்ள இச்சமூகத்தில் வழக்கு தொடுத்தவர் யார் என்று பார்த்தால், பாஜகவில் இருப்பவர். மோடி குறித்துப் பேசியதாகப் புகார் கொடுத்தவர் நேரடியாக எனது பேச்சைக் கேட்கவில்லை மாறாக ”வாட்ஸ் அப்” செயலியில் யாரோ அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு புகார் கொடுத்து இருக்கிறார். பாஜகவினரால் தொடரப்பட்ட வழக்குகள் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. ஒரு அவதூறு வழக்கிற்காக நான் எட்டு ஆண்டுகள் வரை எனது குரலைக் கொடுக்காமல் இருக்க வேண்டுமா? என்று ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ராகுல் காந்தியின் நோக்கம் பிரதமர் மோடி சார்ந்த சமுதாயத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதுதான் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் எந்த சமூகத்தையும் தாக்கும் நோக்கில் பேசவில்லை என்று ராகுல் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. காரசாரமாக நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தீர்ப்பில் சூரத் நீதிமன்றத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ராகுலுக்கு அறிவுரை கூறியுள்ளது.
அதில், “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு நாள் குறைவாக இருந்திருந்தாலும், ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டையை வழங்கியது ஏன் என சூரத் கீழமை நீதிமன்றம் விளக்கம் தர வேண்டும். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. ஒரு தொகுதி பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமான காரணமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பொது வாழ்வில் இருக்கக்கூடியவர்கள் கவனமுடன் பேச வேண்டும் என ராகுல் காந்திக்கு அறிவுரை கூறியுள்ளனர்.