இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் படக்குழுவினரை வாழ்த்தினார். பின்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “எனக்கு என் மாமனார் ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் பொன்னு கொடுத்ததே பெரிய விஷயம். அவர் என்னுடைய தாய் மாமாதான். இருந்தாலும் அந்த சமயத்தில் எனக்கு நிரந்தர வேலை இல்லை. டெலிவிஷனில் ஆங்கராக இருந்தேன். ஒரு எபிசோடு பண்ணால் நாலாயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும்.
ஆனால் என் மாமனார், அவன் எதோ பண்ணனும்னு நினைக்கிறான். மெட்ராஸ்ல சர்வைவ் பன்றதே பெரிய விஷயம். அவன் சினிமாவுக்கு போகனும்னு நினைக்கிறான். அவன சப்போர்ட் பண்ணுவோம் என சொன்னார். அதனால் இந்த மேடையில் என் மாமனாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த மாமனார் போல ஆகாஷ் முரளிக்கும் கிடைத்திருக்கிறார். மாமனார் மருமகன் உறவு அழகானது” என்றார்.