விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். கழிவுநீர் தொட்டி, மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் ஓட்டுனர் கோபால் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். குறிப்பாக சுற்றிலும் வேலிகள் இருக்கும் அந்த பகுதியில் சிறுமி ஏற வாய்ப்பு கிடையாது. அதுவும் இல்லாமல் செப்டிக் டேங்க் சின்னதாக இருக்கிறது. அதில் கால் கூட நுழைய முடியாது. அப்படி குழந்தை உள்ளே விழுந்து விட்டது என்று சொன்னால் கூட ஒரு ஆள் இறங்கி எப்படி தூக்க முடியும்? தூக்கினார்கள் என்றால் சுற்றிலும் ஈரம் இருக்க வேண்டும். ஈரமும் இல்லை. தண்ணீர், சேறு இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. தூக்கிய ஆளை காண்பிக்க சொல்லுங்கள். இதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
அதேபோல் சிலர் வேலை செய்யாத சிசிடிவி கேமராவை எதற்கு ஸ்கூலில் வைத்திருக்கிறீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அந்தக் குழந்தை தொட்டியில் விழுந்து சாகவில்லை எங்க பொண்ணுக்கு பதில் சொல்லுங்க'' என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.