இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
இத்தகைய சூழலில்தான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை என முறைகேடு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தப் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி யூ.பி.எஸ்.சி. (UPSC) முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்கவும், பிரதமர் பதவியேற்கும் முன்னதாக நீட் விவகாரத்தில் முடிவு தேவை எனவும் டெல்லியில் உள்ள ரைசினா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் ஒருவரான ஸ்ரீனிவாஸ் பி.வி கூறும்போது, “சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். அதில் 67 மாணவர்கள் முதல் இடத்தைப் பெறுவது எப்படி?. அதுவும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள். இது குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோரும் குரல் எழுப்பியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை வேண்டும்” எனத் தெரிவித்தார்.