ஒரு எளிய மனிதனுக்கு அத்தியாவசிய தேவையாக கருதப்படும் உணவு, உடை, இடம் ஆகிய மூன்றும் கிடைக்காமல் போனால் கூட அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு கண்டிப்பாக நீதி கிடைத்தே ஆகவேண்டும். அந்த உரிமையை புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிறது. நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் கடைசி நம்பிக்கையாக நீதி கிடைக்கும் இடமான நீதிமன்றங்கள் இருக்கிறது. அதிலும், இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாக டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் இருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கும், முக்கியமான அரசியலமைப்பு கேள்விகள் குறித்த தீர்ப்புகளை வழங்குவதற்கும் உச்சநீதிமன்றம் இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட நீதிமன்றத்தில், இந்த ஆண்டில் நடந்த முக்கியமான வழக்குகளையும், அது சம்பந்தமாக கொடுத்த தீர்ப்புகளையும் பின்வருபவை காணலாம்...
பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்:
கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான 11 குற்றவாளிகளை மகாராஷ்டிரா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி 11 குற்றவாளிகளை கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக, பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேரையும், சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை உச்சநீதிமன்றம், ‘பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ எனக் கூறி குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி மாதம் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத மாநிலம் கோத்ரா கிளை சிறையில் சரணடைந்தனர். உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை பலரும் வரவேற்றனர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தேர்தல் பத்திரம் முறை:
தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து, வங்கிகள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெரும் முறையான தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அரசியல் கட்சிகளுக்கு பெயர் அல்லது மற்ற விவரங்கள் குறிப்பிடாமல் நிதி வழங்கும் இந்த தேர்தல் பத்திர நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கு இந்தாண்டு விசாரணைக்கு வந்த போது, ‘தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஐ ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்து தேர்தல் பத்திரம் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். அதனை இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனத் உத்தரவிட்டது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) வழங்கிய தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இந்தாண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், தேர்தல் பத்திரம் மூலம் 6,060 கோடி ரூபாய் பெற்று நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பா.ஜ.க முதலிடத்திலும், 1,609 கோடி ரூபாய் பெற்று திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் இருந்தது. 1,421 கோடி ரூபாய் பெற்று காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடி ரூபாய் பெற்று நான்காவது இடத்திலும் இருந்தது. தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்திய உச்சநீதிமன்றம்:
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிக்களுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அன்று காலை வாக்குப்பதிவு நடந்த நிலையில், பிற்பகலே வாக்குகள் என்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த தேர்தலில், 36 வாக்குகளில் 16 வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்ட போது, தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டில் பேனாவை வைத்து திருத்துவது போன்ற அடங்கிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் அதிகாரியுடன், அங்கிருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் மகிழ்ச்சியோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும், வாக்குப்பதிவின் போது நடைபெற்ற காட்சிகளை வீடியோ ஆதாரமாக எடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது. இந்த தீர்ப்பின் போது, ‘தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்து சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது எனத் உத்தரவிட்டது. மேலும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தது.
பாபா ராம்தேவை மன்னிப்பு கேட்க வைத்த உச்சநீதிமன்றம்:
உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆங்கில மருத்துவம் தொடர்பாக அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் போது, பொய்யான தகவல்களை வெளியிட்டதற்கு, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார். இதனை ஏற்காத உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்ட 61 நாளேடுகளில் விளம்பரம் வெளியிட்டு பொது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, பதஞ்சலி 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என கண்டனம் தெரிவித்தது. மேலும், பதஞ்சலி நிறுவனம் எடுக்காத விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது:
இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர், இந்து திருமண திருமண சடங்குகள் இல்லாமல் திருமணச் சான்றிதழில் பதிவு செய்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படவே, தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், தங்களுடைய திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்து சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்யாவிட்டால் அதை இந்து திருமணமாக ஏற்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் போது, ‘இந்து திருமணமானது இனப்பெருக்கத்தை எளிதாக்குகிறது. இந்தச் சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அதை இந்து திருமணமாக கருத முடியாது. இந்து திருமண சட்டத்தின் விதிகளின்படி சரியான திருமண விழா இல்லாத நிலையில், ஒருவரையொருவர் கணவன் மற்றும் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முற்படும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடைமுறையை நாங்கள் நிராகரிக்கிறோம். எனவே, பிரிந்த தம்பதிகள் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் சடங்கு இல்லாத நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழை செல்லாது என்றும் அறிவிக்கிறோம்’ என்று கூறி அவர்களின் விவாகரத்து வழங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உத்தரவிட்டனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நிலை:
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால், ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வருகின்றனர். இந்த தேர்வில், சரியான திட்டமிடல் இல்லை என்றும், வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியே படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது சரியல்ல என்றும் பல மாணவர்களின் குமுறல்களாக இருக்கிறது. தன் குழந்தைகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவினால், ஏழை பெற்றோர்கள் வட்டிக்கு பணம் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து வாங்கி தனியார் கோச்சிங் செண்டரில் படித்து மருத்துவர் கனவை நோக்கி மாணவர்களும் இன்றளவும் படித்து வருகின்றனர். இதற்கு ஒரு படிமேல், தேர்வு தோல்வியால் பல மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பணத்தை வைத்துக் கொண்டு நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற நிகழ்வும் இந்தாண்டில் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தாண்டில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனால், நீட் முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்(தற்போது ஓய்வு) தலைமையிலான அமர்வு, நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால், மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல என்று தீர்ப்பளித்தனர்.
குழந்தைகளின் ஆபாசப் படம் என்ற சொல்லுக்குத் தடை:
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல்கள், நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்றும், ஆண்கள் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று சரியான புரிதல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால், இன்று வரையிலும் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அநீதி நடந்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமாகாது என்று சொன்ன நீதிபதியின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
செல்போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த இளைஞர் மீது கடந்த 2023 ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல, அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம்’ என்று கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தனி நீதிபதி வெங்கடேஷ் மீது அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரது தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், குழந்தைகளின் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அதனை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான படங்கள் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
குடியுரிமை சட்டம் 6ஏ பிரிவு:
ஜனவரி 1966ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லுபடியாகும் என்பதை சொல்லும் குடியுரிமை சட்டம் 1955இன் கீழ் உள்ள 6ஏ சட்டப்பிரிவை அசாம் மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 5 அரசியல் சாசன உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வில், குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும் என்ற தீர்ப்பை 4 நீதிபதிகள் வழங்கினர். 1 நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதன் மூலம், 1966ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டுகளுக்கு இடையே வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என்பது உறுதியானது.
புல்டோசர் நடவடிக்கைக்கு தடை:
நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது.
வழிப்பாட்டுத் தலங்களில் ஆய்வு நடத்த தடை:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகக் கூறி அந்த மசூதியை கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர், பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு அங்கு சாமி தரிசனம் நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி போல், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, உ.பி சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி சிலர் புகார்களை வைத்து வருகின்றனர்.
இதனால், சம்பந்தப்பட்ட மசூதிகளில் ஆய்வு நடத்துவதற்கு அந்தந்த மாநில நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகிறது. இந்த உத்தரவின் பேரில், மசூதியில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, சம்பல் மசூதியில் ஆய்வு நடத்தச் சென்ற போது கலவரம் ஏற்பட்டு 4 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி, நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களில் அவர்களின் அனுமதியை மீறி ஆய்வு நடக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி, ஆய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா (தற்போது), கே.சி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, ‘இந்த வழக்குகள் நீதிமன்றத்தின் முன் உள்ளதால், புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவோ அல்லது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படவோ கூடாது. தற்போதுள்ள மதக் கட்டமைப்புகளின் மதத் தன்மையை ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ, கணக்கெடுப்பு நடத்தவோ கூடாது’ என்று நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டனர்.
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:
சாதிய பாகுபாடுகளால், ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி கொடுக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் இட ஒதுக்கீடு என்ற முறையை பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டு வந்தார். இந்த இட ஒதுக்கீடு நடைமுறையின் கீழ், அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களுக்கான உரிமையை சட்டத்தின்படி பெற்று முன்னேற வழிவகுக்கும். ஆனால், இந்த நடைமுறை சாதிப்படி வைக்கக் கூடாது, அவர்கள் பெறும் மதிப்பெண்படி வைக்க வேண்டும் என்றும் திறமை அடிப்படையில் வைக்க வேண்டும் என்று தவறான புரிதல்களோடு ஒரே பாட்டை பாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு கட்டத்திற்கு மேல், பட்டியலினத்தவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற படித்தும் பயனில்லாத சில அறிவுஜீவிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான விவாதங்கள், கடந்த 1950 ஆண்டிலிருந்து நவீன உலகமான 2024ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும், இந்த இட ஒதுக்கீட்டு முறையைப் பலரும் தவறாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. இந்த நிலையில், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், அருந்ததி சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பட்டியல் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது.