கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மேலும், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்எம்பிவி (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது.
பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர்களை தாக்கும் எச்எம்பிவி வைரஸ் உள்ளிட்ட பல நோய்த் தாக்குதலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. மைக்கோ பிளாஸ்மா நிமோனியா என்ற நோயும் சீனாவில் மக்களை அதிகம் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சீனாவில் பரவும் எச்எம்பிவி வைரஸ் பற்றி இந்தியர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், இந்தியாவில் இதுவரை எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்றும் பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.