சத்தீஸ்கர் மாநிலத்தில், செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு எதிராக அறிக்கையை பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி, சுரேஷ் சந்திரகர் செயல்பாடுகள் குறித்து அம்மாநில அரசு விசாரணை நடவடிக்கையை தொடங்கியது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் (01-01-25) இரவு முதல் முகேஷ் காணாமல் போனார். சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரித்தேஷ் ஏற்பாடு செய்த சந்திப்பைத் தொடர்ந்து முகேஷின் தொலைபேசி அணைக்கப்பட்டதால் அவரது சகோதரர் யுகேஷ் சந்திரகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தது.
இந்த நிலையில், இன்று (03-01-25) சட்டன்பாரா பகுதியில் உள்ள சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் முகேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஒப்பந்ததாரர் சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.