மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றத்திற்கான காரணத்தையும், இந்தியாவின் புதிய தேசிய மதம் என்ன என்பதனையும் பாபா ராம்தேவ் நேற்று கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படு உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நான்டட் நகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பாபா ராம் தேவ் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பங்கேற்கிறார். இதற்காக நேற்று மும்பைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "யோகா கலை என்பது கடவுளால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் யோகாவை மதித்தார்கள், வெளியே சொல்லாவிட்டாலும் ரகசியமாக யோகாவைச் செய்தார்கள். ஆனால், அவர்களின் வாரிசுகள் யோகாவை மதிக்கவில்லை. இதனால் தான், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
அதேநேரம் பிரதமர், நரேந்திர மோடி மக்களோடு மக்களாக அமர்ந்து யோகா செய்தார். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரும் யோகா செய்து வருகிறார்கள். யோகா என்பது அரசியல், சாதி, நம்பிக்கை, மதம் ஆகியவற்றை கடந்தது என்பதால் யோகாவை நாம் அனைவரும் தேசிய மதமாக ஏற்க வேண்டும்" என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான பாபா ராம்தேவின் இந்த புதிய காரணத்தை கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.