நக்கீரன் வாயிலாக டிஜிட்டல் சமூக ஆய்வாளர் வினோத் ஆறுமுகத்தை சந்தித்தோம். அப்போது அவர் ஆன்லைன் மோசடிகள் குறித்தும் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் மனிதர்களின் எமோஷ்னலை டார்கெட் செய்து அரங்கேறுகிறது. மொபைல் உபயோகிக்கும்போது ஆபாச வீடியோக்கள் வந்தால் அதை சிலர் கிளிக் செய்து பார்க்கின்றனர். அதன் பிறகு அந்த நபரின் மொபைலை ஹாக் செய்து அவரின் புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். இது போன்ற பிரச்சனைகள் வரும்போது தைரியமாக அதை எதிர்கொண்டு உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். பணம் பறிக்க நினைப்பவர்கள் விரிந்த எமோஷ்னல் வலையில் சிக்காமல் துணிச்சலுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. சில விஷயங்களைத் தைரியமாகத்தான் கையாள வேண்டும். இது மாதிரியான பிளாக் மெயில் செய்து அல்லது ஆசையைத் தூண்டி அதிகளவில் ஏமாற்று வேலைகள் நடக்கிறது.
வேலைக்குச் செல்பவர்கள் வருமான பற்றாக்குறையால் வேறு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைனில் ஏமாறுகின்றனர். இப்படி சம்பாதிக்க ஆசை இருப்பவர்கள் ஏமாற்ற நினைக்கும் கும்பலிடம் இலகுவாக சென்றுவிடுவார்கள். ஏனென்றால் ஆசையைத் தூண்டி ஏமாற்றுபவர்கள் குறிப்பிட்ட சிலரை டார்கெட் செய்ய மாட்டார்கள். பொதுவாக அனைவருக்கும் மெசேஜ் அனுப்புவார்கள். அதில் கண்டிப்பாக வருமான பற்றாக்குறையால் தவிக்கும் சிலர் முதலீடு செய்ய நினைத்து ஒரு தொகையை அனுப்புவார்கள். அனுப்பிய அந்த தொகையைவிட குறிப்பிட்ட தொகை அதிகமாக அவர்களுக்கு முதலில் வருமானம் வரும். இதுபோன்று தொடர்ந்து செய்து வரும்போது ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து பணத்தை இழந்து நிற்பார்கள். இப்படி ஏமாற்றுபவர்கள் முதலில் உங்களுக்கு ஆசை காட்டி எச்சரிக்கையாக இருக்கவிடாமல் செய்து எளிதில் ஏமாற்றிவிடுவார்கள்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பிரபலமான செய்தி தொகுப்பாளரின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தி ஒரு செயலி வந்துள்ளது அந்த செயலி மூலம் சாதாரண மக்களும் பணக்காரர்கள் ஆகலாம் என்றும் அந்த செயலியில் பணம் கட்டினால் அந்த செயலியே டிரேடிங் செய்து பணம் சம்பாதித்துக்கொடுக்கும் என்றும் சொல்லவைத்துள்ளனர். தொடர்ந்து அதே வீடியோவில் முகேஷ் அம்பானி இந்த செயலியை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று முகேஷ் அம்பானி பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த வீடியோவை பார்த்து முடித்ததும் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யக்கோரி தானாக திரையில் காட்டும். இப்படி இந்த செயலியை பதிவிறக்கம் ஒருவர் ரூ.5 கோடியை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். இப்படி மூதலீடு செய்பவர்களை டார்கெட் செய்து ஏமாற்று வருகின்றனர். அதனால் இது போன்ற வீடியோக்கள் வந்தால் தவிர்த்துவிடுங்கள் என்றார்.