சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கோஷாமஹால் தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் ராஜா சிங். இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் யாத்திரையின் போது எந்த மசூதிகளுக்கும் செல்லக் கூடாது. ஐயப்ப தீக்ஷை விதிகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள வாவர் மசூதிக்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அவர்களின் புனிதத்தன்மை கெட்டுவிடும், தூய்மையற்றவர்களாகி விடுவார்கள். சபரிமலை செல்லும் பக்தர்களை மசூதிக்கு செல்ல வேண்டும் என்று கூறு சதி திட்டம்” என்று பேசினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எருமேலியில் அமைந்துள்ள வாவர் மசூதி, ஐயப்ப பக்தர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமாக அமைந்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு நடைபயணம் தொடங்கும் முன் பக்தர்கள் பாரம்பரியமாக, இந்த மசூதிக்கு வருகை தருகின்றனர். அங்கு வாவர் மசூதியில் வழிபாடு செய்வது சபரிமலை பயணத்தின் இன்றியமையாத பகுதியாக கருதப்படுகிறது.