
சைடஸ் காடில்லா ஹெல்த்கேர் லிமிட் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி வழக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் 6.2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தான "கோவாக்ஸின்" எனும் மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இரண்டாவது நிறுவனமாக அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் காடில்லா என்னும் மற்றொரு நிறுவனத்துக்கும் கரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் மீது இந்த மருந்தை இரு கட்டங்களாகப் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே எலி, முயல், கினியா பிக், போன்ற விலங்குகளுக்கு மருந்துகளைப் பரிசோதனை செய்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த மருந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.