ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர், “பீகாரில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
எதிர்க்கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்குச் சேவை செய்ததில்லை. பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறும். அடுத்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த முறை அவர்கள் பெற்ற எந்த இடத்திலும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார்.