வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள வேலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் நேற்று (03.01.2025) காலை 7.00 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் வேலூர் மாநகர தி.மு.க விவசாய அணி அமைப்பாளராக உள்ள மாநகர உறுப்பினர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 2 நாள்களாக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.
துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் தொடர்ந்து 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு விரைந்தார். இன்று இரவு 10:10 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு புறப்பட்டார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூபாய் 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது வாக்காளர்களுக்கு தருவதற்காக வைத்திருந்த பணம் என முடிவு செய்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதன்பின் அந்த தொகுதிக்கு மட்டும் தனியாக நடைபெற்ற தேர்தலிலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அந்த வழக்கு இப்போதும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பாகவே இந்த ரெய்டு நடந்தாகக் கூறப்பட்டது.