ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முதன்முறையாக பேட்டியளித்துள்ளார் சச்சின் பைலட்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி வதேரா, கே.சி.வேணுகோபால் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பேசினார் சச்சின் பைலட். அதன்பிறகு அவர் அளித்த பெட்டியில், "நாங்கள் கொள்கைகள் பற்றிய விவகாரங்களையே எழுப்பினோம். எங்கள் குறைகள் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர், இதை வரவேற்கிறோம். நான் எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படவில்லை. கட்சி எனக்கு பதவி அளித்துள்ளது, அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி உருவாக பாடுபட்டவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர நான் பாடுபட்டேன். எனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்சி நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கிறேன். சோனியாஜி, ராகுல்ஜி, பிரியங்காஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் குறைகளை அவர்கள் குறித்து கொண்டனர், அதை புரிந்து கொண்டனர். நான் என் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன், நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். ராஜஸ்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவும், ஜனநாயக மதிப்புகள் காக்கப்படவும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.