நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்காலில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.