நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அந்தந்த வேட்பாளர்கள் அவர்களின் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட எந்தக் கட்சிகளும் முன்வராததால் கமலஹாசன் தனது கட்சியை தனித்து களமிறக்கி உள்ளார்.
ஏற்கனவே கேரளா முதல்வர் பினராயிவிஜயனை சந்தித்தார். அதேபோல் தொடக்கத்திலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். இந்தப் பின்னணியில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவேண்டுமென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துவிட்டு கமல் திரும்பியுள்ளார். இந்திய அளவில் காங்கிரஸ் ஒரு அணியாகவும் மாநிலக் கட்சிகள் ஆங்காங்கே அந்த மாநில அளவில் உள்ள கட்சிகள் கூட்டணியாக இணைந்தும் போட்டியிடுகின்றன. இதில் மூன்றாவது அணியாக சொல்லப்படுகிற மம்தா பானர்ஜி தீவிரமாக தேர்தல் களத்தில் செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.