முதல்வர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பிரபல தெலுங்கு நாளிதழின் புகைப்படக்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் - அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராப்தாடு நகரில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் என்பதால், உள்ளூர் செய்தியாளர்கள் அனைவரும் அங்கு சென்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல் நாளிதழ் புகைப்படக்காரர்களும் செய்தித் தொலைக்காட்சி வீடியோகிராபர்களும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரபல தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியின் புகைப்படக்காரரைச் சூழ்ந்துகொண்டு, அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதலில் ஆந்திர ஜோதி நாளிதழ் புகைப்படக்காரரின் சட்டை கிழிந்து தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் விடாமல், அங்கிருந்தவர்கள் அவரை காலால் உதைத்தனர். மனிதாபிமானமுள்ள சிலர், அந்தப் புகைப்படக்காரரை மீட்டு, பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
முதல்வர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர் கண்முன், பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடயே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.