சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அந்த குழுவில் பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் இடம்பெற்றனர். இதனை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் இடைக்கால சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகுவதாக அறிவித்துள்ளார். சிபிஐ இயக்குநரை நியமிக்கும் குழுவில் தான் உள்ளதால் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை மூத்த நீதிபதி ஏ.சிக்ரிக்கு மாற்றி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.