டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (09/12/2020) காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ் குமார் கங்வார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "பொது இடங்களில் வை-ஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாமல், வை-ஃபை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி, 'பி.எம்.-வானி' (PM WANI) என அழைக்கப்பபடும். இத்திட்டம் நாட்டில் பொது வை-ஃபை நெட்வொர்க் வளர்ச்சியை அதிகரிக்கும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்துக்கான (ஃபைபர் கேபிள்) திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "அத்மர் நிர்பர் பாரத் தோஜர் யோஜனா திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூபாய் 1,584 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும், இதே திட்டத்தை 2020-2023 வரை, ரூபாய் 22,810 கோடி செலவில் மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் 58.5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்" என்றார்.