காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவில் அமல்படுத்தகோரி 168 கிலோமீட்டருக்கு பாத யாத்திரை நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்தநிலையில் கர்நாடக அரசு, வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது பாத யாத்திரையை நடத்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முடிவு செய்துள்ளார். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பாத யாத்திரையை நடத்தப்போவது குறித்து பேசியுள்ள அவர், கர்நாடகாவில் கரோனாவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: கரோனா எங்கே இருக்கிறது? கரோனாவே இல்லை. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எங்களது பாதயாத்திரையை சீர்குலைக்கவும் அரசாங்கம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோசடி செய்கிறது. பெங்களூர் நகரிலும் பிற மாவட்டங்களிலும் நிகழும் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தங்களுக்கு அர்ப்பணிப்பு இல்லாததை எங்கள் பாதயாத்திரை வெளிப்படுத்தும் என்று ஆளும் பாஜக அஞ்சுகிறது. மேகதாது திட்டம் மூலம் 2.5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து அதை நனவாக்கவே நாங்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாஜகவின் அரசியல் இல்லையா?
நான் கரோனா நோயாளிகளின் பட்டியலையும் கரோனாவால் இறந்தவர்களின் பட்டியலையும் கேட்டேன், ஆனால் அரசாங்கம் அதை வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் வெளிவரும் இந்த பாதிப்பு எண்ணிக்கைகளை நான் நம்பவில்லை. நாங்கள் பல மாவட்டங்களில் சோதனையை நடத்தினோம். நாங்கள் கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசாங்கம் வெளியிடும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தவில்லை. சில மரணங்கள் வேறு காரணத்தால் ஏற்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எந்தவொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒரு கரோனா நோயாளி கூட இல்லை என்பதைக் கண்டறிந்தோம். மேலும் இதுதொடர்பான விவரங்களை வெளியிட விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன். கரோனா விஷயத்தில் அரசாங்கம் இவ்வளவு தீவிரமாக இருந்தால், சட்டசபையில் அரசின் அனைத்து ஆதரவாளர்களுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது எப்படி?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.