2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதாவை சிவசேனா கட்சி, தனது சாம்னா இதழில் கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது. நேற்று காலை வெளியான சாம்னா இதழில், கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த மசோதா என குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை விமர்சித்திருந்தது. இதனையடுத்து மக்களவையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக சிவசேனா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்தது.
இந்நிலையில், இந்த மசோதாவிற்கு ஆதரவளித்தவர்களை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், குடியுரிமை மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். அதை ஆதரிக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் நமது தேசத்தின் அஸ்திவாரத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர் என கூறி உள்ளார். ராகுலின் இந்த விமர்சனம் அதன் மகாராஷ்டிரா கூட்டணி கட்சியான சிவசேனாவிற்குமானது தான் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.