இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமர் அறிவித்தபடி நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான நபர்கள், தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், அதற்கு புதிதாக பதிவு எதுவும் செய்யவேண்டியதில்லை எனவும் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் பூஸ்டர் டோஸுக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர்களுக்கு, இன்று (08.01.2022) மாலையில் இருந்து முன்பதிவு தொடங்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.