
செங்கல்பட்டில் இன்று (11.03.2025) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என்று திமிராக பேசுகிறார் யார்?. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அவர் தேசியக் கல்விக் கொள்கை என்கிற பெயரில் புகுத்துகின்ற கொள்கை என்னவென்று கேட்டால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்று தான் நாம் அதை எதிர்க்கிறோம்.கல்விக்குள் மாணவர்களைக் கொண்டு வர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் மதவாதத்தை புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு, கல்வியில் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது.
இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், ‘இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்’ என்று பிளாக்மெயில் செய்கிறார் யார்?. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதனால் தான் ஏற்கனவே உறுதியாக சொன்னேன். திட்டவட்டமாக சொன்னேன். அழுத்தந்திருத்தமாக சொன்னேன். 2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக நான் சொன்னேன். இந்த மேடையில் அதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு இவர்களின் சதிகளுக்கு எதிராக விடாமல் போராடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று பாராளுமன்றத்தில், தர்மேந்திர பிரதான் என்ன பேசியிருக்கிறார் ‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று’ நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த மேடையின் மூலமாக உங்களின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மானம் அவன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு’ என்று எழுதினார் கலைஞர். அந்த கலைஞருடைய வாரிசுகள் நாங்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காட்டினார்கள். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க. உறுப்பினர்கள் போல பா.ஜ.க. அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிருபித்திருக்கிறார்கள். ‘நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்’ என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழ்நாட்டுக்காகப் போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் மக்களான உங்களுடைய ஆதரவு தொடர வேண்டும்” எனப் பேசினார்.