
கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கமான ‘வைரமுத்தியம்’ விழா சென்னையில் இன்று (16.03.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் “வைரமுத்தியம்” ஆய்வு நூலை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில், அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கவிப்பேரரசு வைரமுத்து, பன்னாட்டு தமிழ் அறிஞர்கள், பேராசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “என் வானம் பெரிது, என் வேள்வி பெரிது, என் தமிழ் பெரிது என் தவம் பெரிது என் தோள்களில் கனக்கும் லட்சியத்தோடு வந்தேன் என்று சொல்லி அதே இலட்சியத்திற்காக வாழ்பவர் வைரமுத்து. தமிழ்ப் பண்பாட்டு மரபை திராவிடச் சிந்தனை மரபை பொதுவுடைமைக் குறிக்கோளைக் கொண்டவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதுதான் வைரமுத்துவின் தனித்த சிறப்பு ஆகும். திரைத்துறையில் வளர்ந்த பிறகு உயர்ந்தபிறகு தேசிய விருதுகளைப் பெற்ற பிறகும் தன்னை திராவிட இயக்கப் படைப்பாளியாக மறக்காமல் மறைக்காமல் அவர் காட்டிக்கொண்டதை பாராட்டுவதற்குதான் நான் வந்தேன்.
என் இளமைக் காலத்திலேயே, தீ வளர்த்துக் கொண்டிருந்த திராவிட யாகத்தில் எனது அடுப்புக்கு நெருப்பு எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் துணிச்சல் வைரமுத்துக்கு இருந்தது. தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையும் புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகளும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தும் தன்னை வார்ப்பித்ததாக அவர் சொல்லி இருக்கிறார். கலைஞரின் எழுத்துகளே என் ரத்தத்தைத் துள்ள வைத்திருக்கின்றன. என் நாடி நரம்புகளை வீணையாக்கி வாசித்திருக்கின்றன என்று எல்லா மேடைகளிலும் சொன்னவர் அவர். இந்தக் கொள்கை உரம்தான் அவரை கவனிக்க வைத்தது.
தமிழுக்குப் பெருமை சேர்த்ததால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் திராவிடக் கொள்கைகளுக்கு வலுச்சேர்த்ததால் திமுக தலைவர் என்ற வகையிலும், கலைஞரை இலக்கிய ஆசானாக ஏற்றுக் கொண்டதால் அவரின் மகன் என்ற பாச உணர்வாலும் நான் விரும்பிக்கேட்கும் பல பாடல்களை தந்தவர் என்பதால் ஒரு ரசிகன் என்ற மகிழ்ச்சியிலும் கவிப்பேரரசுவை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

கவிப்பேரரசே பொதுவாக 100 ஆண்டு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். ஆனால், இங்கு இருக்கக்கூடிய நீங்கள் எல்லோரும் வாழ்த்துவதுபோல் நானும், நீங்கள் படைப்பாளி என்பதால், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து, உங்கள் பாடல்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகட்டும். படைத்த நூல்களின் எண்ணிக்கை 100 ஆகட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” எனப் பேசினார்.