இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் (24/07/2022) நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், முடிவுகள் ஜூலை 21- ஆம் தேதி அன்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (23/07/2022) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பிரியாவிடை அளித்தனர். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நாட்டுக்கு எனது சிறப்பானவற்றைக் கொடுக்க முயற்சியை மேற்கொண்டேன். கரோனா பெருந்தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாக செயல்பட்டது. திரௌபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். எனக்கு கிடைத்த நினைவுகள் அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். சர்வதேச பருவநிலை செயல்பாடுகளில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் உயர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மைய மண்டபத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அருகில் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெடுத்து கும்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.