
உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்லும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கணவன் - மனைவி இருவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பைக்கில் இந்தியாவிற்கு வந்தனர். அந்த தம்பதியினர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட போது கணவர் கண்முன்னே 7 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்தியாவிற்கு பெண் சுற்றுலா பயணிகள் தனியாக செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவே எச்சரிக்கும் அளவிற்குச் சென்றது. இந்த நிலையில் தான் தற்போது பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியா வந்த பெண்ணை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இளைஞர் கைலாஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரிட்டனை சேர்ந்த பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நட்பாக பேசி வந்துள்ளனர். மேலும் பிரிட்டன் பெண் இந்தியா வரும் போது கைலாஷை சந்திப்பதாகவும் கூறியுள்ளாராம். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரிட்டனைச் சேர்ந்த அந்த பெண் இந்தியா வந்துள்ளார். முதலில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கிருந்த பிரிட்டன் பெண், அங்கிருந்து கோவாவிற்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த அவர், மஹிபால்பூரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது விடுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்த ஒருவர் பிரிட்டன் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை பார்க்க வைந்த சமூக வலைதள நண்பரான கைலாஷ், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைலாஷ் மற்றும் விடுதியின் தூய்மை பணியாளர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனித் தனியாக இரு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் பிரிட்டன் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அந்நாட்டுத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.