
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் நேற்று (15.03.2025) தனியார் யூடியூப் சேனல் நடத்திய விழாவில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், “ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அனைவராலும் உணர முடியும். இன்றைக்கும் நான் அதிமுக தொண்டனாக இருக்கிறேன். நான் தலைவன் அல்ல. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு தெரியும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு வரி கூட தவறாக நான் பேசியதே இல்லை.
முகம் சுளிக்கும் அளவிற்கு நான் வார்த்தைகளை அள்ளி வீசியதில்லை. என் லட்சியம் உயர்வானது; என் பாதை தெளிவானது; வெற்றி முடிவானது. மகாகவியின் வார்த்தையைப் போல ‘சில வேடிக்கை மனிதர்களை போல நான் வீழ்ந்துவிட மாட்டேன்’ என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” எனப் பேசியிருந்தார். இதனையடுத்து செங்கோட்டையனின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இது தனிப்பட்ட விஷயம் என எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. ஆகவே அவருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுக, தொண்டர்களால் இயங்கும் இயக்கம். இதில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும்; கசப்புகள் இருக்கும்; மன வேறுபாடுகள் இருக்கும். ஆனால் வேறுபாடுகளாலும் மனவருத்தங்களாலும் அதிமுகவை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைக்குப் போனார்கள். காணாமல் போய்விட்டார்கள். சொந்த அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன பிரச்சனையோ அதை பொதுச் செயலாளரை சந்தித்து சொல்ல வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயல்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி 2026ஆம் ஆண்டு வர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தமிழக மக்களின் கருத்தாகவும் அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் கருத்தாகவும் இன்றைக்கு உள்ளது.

அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு அதிமுக தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்றால் ஈகோ பிடித்த தலைவர்கள் எல்லாம் தங்களுடைய ஈகோவை எல்லாம் விட்டுக் கொடுத்து அதிமுக நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்தாக உள்ளது”எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் “நாகரிகம், அநாகரிகம் பற்றி எல்லாம் செங்கோட்டையனுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் எப்போதும் அமைதியாக, எந்த ஒரு சர்ச்சையிலும் ஈடுபடாதவர் என்பது தெரியும். அவருடைய அரசியல் வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியில் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இன்றைக்கு அவர் எதிர் அணியில் இருந்தாலும் உண்மையை உண்மை என்று தானே சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.