தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தற்போது திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், கோழிக்கோடுவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கேரளாவில் மாநில முதல்வருக்கும், முன்னாள் முதல்வருக்கும் கரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, அம்மாநில மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.