
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுற்றிச் சுழன்று வருகிறது எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதை அவர் கிட்ட கேளுங்க.. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும்?. தனிப்பட்ட பிரச்சனையை பேசுற இடம் இது இல்லை. அவருக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாகச் செயல்படுகின்ற கட்சி. திமுக மாதிரி அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. என்றைக்குமே நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது' என தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 6 முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டும் கட்டுப்படாமல் அவர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் செங்கோட்டையனின் கைகளைப் பிடித்த படி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர் கைகளை உதிரி விட்டு சிரித்தார். அதேபோல் அவர் அருகே அமர்ந்திருந்த கடம்பூர் ராஜு, 15 நிமிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி என அடுத்தடுத்து 6 முன்னாள் அமைச்சர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர் தனியாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பேரவை வெளிநடப்பின் போது கூட எடப்பாடி பழனிசாமி வெளியேறிய வழியில் செல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய பாதையில் செங்கோட்டையன் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவை ஒருங்கிணைக்க ஓபிஎஸ் வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி உடன் பயணிக்கும் சில முன்னாள் அமைச்சர்களே அதிமுக ஒருங்கிணைப்பை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருவதாகவும் அதில் முதல் நபராக செங்கோட்டையன் இருப்பதால் தான் இந்த பாராமுகம் நீட்டிப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் நிலவும் இந்த புகைச்சல்களால் 'கட்சியில் மீண்டும் ஒரு பிளவா?' என பரபரப்பாகி இருக்கிறது அதிமுக அரசியல் வட்டாரம்.