Skip to main content

மீண்டும் ஒரு ஜென்-சி காதல் கதை; ஜெயித்ததா? - ஸ்வீட்ஹார்ட் விமர்சனம்

Published on 15/03/2025 | Edited on 15/03/2025
Sweetheart movie review

ரியோ ராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜோ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே போன்று ஒரு வெற்றியைப் பெறும் நோக்கில் தற்போது ‘ஸ்வீட்ஹார்ட்’ படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். சமீப காலங்களாக குடும்பஸ்தன், டிராகன் போன்ற ஜென் சி டைப் படங்கள் பெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில் தற்போது இதே பாணியில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்வீட்ஹார்ட் படம் எந்த அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது?

சிறுவயதிலேயே தாய் தந்தையை பிரிந்து வாடும் ரியோ ராஜ் காதல் மற்றும் குடும்ப உறவு மேல் நம்பிக்கை இல்லாத ஒரு நபராக இருக்கிறார். இவருக்கு அப்படியே நேர்மறையாக இருக்கும் நாயகி கோபிக்கார ரமேஷ் காதல், குடும்பம், குழந்தை என அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை உடையவராக இருக்கிறார். இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. அந்த காதல் தனிமையில் நெருக்கமாக இருக்கும் வரை சென்று விடுகிறது. நாயகி கோபிகா ரமேஷும் கர்ப்பம் அடைந்து விடுகிறார். இந்த கர்ப்பத்தை கலைக்க ரியோ ராஜ் முயற்சிக்க இன்னொரு பக்கம் நாயகி கோபிகா ரமேஷ் அதை எப்படியாவது காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் இவர்களில் யார் ஜெயித்தார்கள்? இவர்களின் காதல் ஜெயித்ததா இல்லையா?  என்பதே இப்படத்தின் மீதி கதை.

Sweetheart movie review

ஜோ படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு லவ் ஸ்டோரியில் நடித்திருக்கும் ரியோ ராஜிக்கு இந்த படம் ஒரு நல்ல வரவேற்பை பெரும் படமாகவே அமைந்திருக்கிறது. இந்த கால ஜென் சி தலைமுறையினர் காதல் செய்வது எந்த அளவு ஆழமாக இருக்கிறது, அவர்கள் காதலை எந்த அளவு சீரியஸாக எடுத்துக் கொள்கின்றனர், அதில் வரும் தற்கால முரண்கள் என்ன, அதை அவர்கள் எப்படி ஓவர் கம் செய்து காதலில் ஜெயிக்கின்றனர், காதல் குடும்பம், உறவு, பிள்ளைகள் என அத்தனை குடும்ப கலாச்சார விஷயங்களுக்குள் இவர்கள் அடாப்ட் ஆவது எந்த அளவு முக்கியத்துவம் போன்ற விஷயங்களை இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரு நல்ல காதல் படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்வினித் எஸ் சுகுமார்.

ஒரு சிறிய ஒன் லைன் கதையை வைத்துக் கொண்டு முழு படத்தையும் முடிந்தவரை சுவாரசியமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒரு கர்ப்பம் அதை உறுதி செய்து கலைக்க முயற்சி செய்தார்களா அல்லது அதை காப்பாற்றினார்களா என்ற கதை கருவை வைத்துக்கொண்டு அதற்குள் காதல், அன்பு, பாசம், ஏமாற்றம், ஏக்கம் போன்ற விஷயங்களை அழகாக உட்புகுத்தி இறுதி கட்ட காட்சிகளில் பெண்ணுரிமை எந்த அளவு முக்கியம் என்ற சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை சிறப்பாக கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கின்றார். 

Sweetheart movie review

நாயகன் ரியோ ராஜ் வழக்கம்போல் பல படங்களில் பார்த்து பழகிய லவ்வர் பாய் கதாபாத்திரமான வெறுப்பேற்றும் நாயகனாக நடித்திருக்கிறார். அதை தனக்கு என்ன வருமோ அதை வைத்துக் கொண்டு சிறப்பாக செய்ய முயற்சி செய்திருக்கிறார். நாயகி கோபிக்கார ரமேஷ் முகத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது. ஆனால் இந்த முதிர்ச்சியான ஒரு கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் என கையாண்டு கவனம் பெற்று இருக்கிறார். சுழல் வெப்சீரிஸுக்கு பிறகு இவரின் நடிப்பு மீண்டும் ஒருமுறை பாராட்டு பெரும்படி அமைந்திருக்கிறது. ரியோ ராஜ் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு புதிய காமெடி நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சரசரவென வசனங்கள் பேசி கலகலப்பாகவும் அதே சமயம் மிக எதார்த்தமான நடிப்பை அழகாகவும் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் ரியோவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்திருக்கிறது.

இவரின் காதலியாக வரும் பௌசி கதாபாத்திரம் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. மற்றபடி உடனடித்த அனைத்து முக்கிய நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தைக் காப்பாற்ற தூண் போல் நின்று இருக்கின்றனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சிறுமி மிக மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு அவர் வரும் காட்சிகளை எல்லாம் அழகாக கடந்து செல்ல உதவி இருக்கிறது. 

Sweetheart movie review

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் ஃப்ரெஷ்ஷாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை சூப்பர். அவரே இந்த படத்திற்கு தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படத்திற்கு எந்த அளவு இசை தேவையோ அதையே கொடுத்து கவனம் பெற முயற்சி செய்திருக்கிறார். இருப்பினும் அந்த ஓல்ட் யுவன் மிஸ்ஸிங்! தற்போது இருக்கும் ஜென்-சி காலகட்ட காதல் கதைகள் நன்றாக வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த ஸ்வீட்ஹார்ட் படமும் இணையும். 

ஸ்வீட்ஹார்ட் - செல்லம்!

சார்ந்த செய்திகள்