நாடு முழுவதும் உள்நாட்டு விமானச் சேவையை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 15,000 ஐ கடந்துள்ள நிலையில், இந்தியாவில் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.49 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.
இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானச் சேவைகள் மற்றும் பெரும்பான்மை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானச் சேவையையும் மார்ச் 24 நள்ளிரவு முதல் நிறுத்துவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.