நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. . இதில், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கூறியதாகவும், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொள்ளவில்லை என்வும் கூறப்பட்டது. அதனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததாக கூறப்பட்டது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியது. மேலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் எம்.பியும், மூத்த தலைவருமான டெரக் ஓ பிரெயின் கூறியுள்ளார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (24-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும், இந்திய கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதாகவும், பாஜகவை தோற்கடிப்பதே மிகப்பெரிய நோக்கம் என்றும் கூறியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, ஆனால் நாங்கள் மம்தா பானர்ஜியை மதிக்கிறோம்” என்று கூறினார்.