
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீசார் கல்வராயன் மலை அருகே உள்ள பெருக்கஞ்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பெருக்கஞ்சேரி ஓடைப்பகுதியில் கள்ளச்சாராய ஊரல் மற்றும் கள்ளச்சாராயம் இருந்ததைக் கண்டு மதுவிலக்கு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து 160 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 12 லிட்டர் கள்ளச்சாராயத்தைச் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பெருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் சிந்தாமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த சித்ரா, முருகேசன், மாரிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்க எவ்வளவுதான் மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டாலும் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்வதும் காய்ச்சுவதும் வாடிக்கையாக உள்ளது எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
கலாச்சாராயம் காய்ச்சுவதை போலீஸ் தடுப்பதாகக் கூறினாலும் போலீஸில் உள்ள சில கருப்பு ஆடுகள் கள்ளச்சாராயம் வியாபாரிகளுக்குத் துணை போகின்றனர் இதனால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தோல்வியைச் சந்தித்துள்ளனர் சாராய வியாபாரிகளுக்கும் சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் போலீஸ் மீதான பயம் இல்லாமல் போய்விட்டது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.