
தமிழ்நாடு முழுவதும் ஆளும்கட்சியான திமுக சார்பில், தமிழ்நாட்டுக்கான நிதி தருவதில் பாரபட்சம், மும்மொழி கொள்கை உள்ளிட்டவை குறித்து ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்ச் 12ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக நிர்வாக ரீதியாக பிரித்துள்ள 74 மாவட்டங்களிலும் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த வகையில் திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் கீழ்பென்னாத்தூர் பேரூரில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணன், ஆடுதுறை உத்தராபதி கலந்து கொள்கின்றனர். கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி. அவர் தொகுதியில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கான நோட்டீஸில் அவரின் பெயரோ, புகைப்படம் எதுவும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளார்கள். அதேபோன்று மாநில பொறியாளர் அணி செயலாளராகவுள்ள எஸ்.கே.பி. கருணாநிதி பெயரும் அதில் இடம்பெறவில்லை.

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏவை அவமானப்படுத்தும் விதமாக கோஷ்டி அரசியல் நடக்கிறது. நோட்டீஸை விடுங்கள் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது என கீழ்பென்னாத்தூர் பேரூர் சார்பாக போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் கூட அவரின் புகைப்படத்தை போடவில்லை. இதற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குள் என்ன கூட்டம் நடந்தாலும் அதில் தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் அவரின் புகைப்படம் இடம்பெறாமல் இருக்காது. ஆனால், தற்போது பிச்சாண்டி பெயரையோ, புகைப்படத்தையோ போடவில்லை, யாரோ போடக்கூடாது எனச்சொல்லியுள்ளார்கள். அதனால் தான் புகைப்படத்தை புறக்கணித்துள்ளனர். 200 தொகுதி இலக்கு என முதல்வர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ, துணை சபாநாயகர், முன்னாள் அமைச்சரை அவரது தொகுதியிலேயே அவமானப்படுத்துகிறார்கள் என வெதும்பினார்கள் பிச்சாண்டி ஆதரவாளர்கள்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “துணை சபாநாயகர் விழுப்புரம் மத்திய மாவட்டம் வானூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதனால் அவரது பெயரை நோட்டீஸில் போடவில்லை. அவரது பெயரை மட்டுமல்ல, மாவட்டச் செயலாளரான அமைச்சர் எ.வ.வேலு பெயரையும்தான் அதில் போடவில்லை. கூட்டத்தில் யார், யார் கலந்துகொள்கிறார்களோ அவர்களது பெயரை மட்டுமே போடப்பட்டுள்ளது. எஸ்.கே.பி கருணாநிதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர் சிவ.ஜெயராஜ் சேலத்தில் கலந்துகொள்வதாகத் தலைமை அறிவித்துள்ளது. இதனால் அவர்களது பெயர் போடவில்லை. இதில் எங்கே பிச்சாண்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார், அவரை அவமானப்படுத்துவதாக நினைத்தால் இவர்களையும் அவமானப்படுத்துவதாக தானே அர்த்தம்” எனக் கேள்வி எழுப்புகின்றனர்.