இந்தியாவில் பெண்களின் வருமானத்திற்கும் ஆண்களின் வருமானத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கண்டறிய மான்ஸ்டர் வலைதளம் 2018-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் ஆண்களைவிட பெண்கள் 19 சதவீதம் குறைவன வருமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், இதே நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இதே ஆய்வை மேற்கொண்டது அதில் இந்த விகிதாச்சார அளவு 20 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 1 சதவீதம் குறைந்து 19 சதவீதமாக உள்ளது.
குறிப்பாக ஒரு மணிநேரத்திற்கு ஆண்கள் ரூ. 242.49 ரூபாயை வருமானமாக பெறுகின்றனர். அதே பெண்கள் ஒரு மணிநேரத்திற்கு 196.3 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர். இதில் ஆண்களைவிட பெண்களுக்கு ஒருமணி நேரத்திற்கு கிடைக்கும் வருமானம் 46.19 ரூபாய் குறைவாக உள்ளது.
துறை ரீதியாக பார்த்தால் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் பெண்கள் ஆண்களைவிட 26 சதவீதம் குறைவான வருமானத்தை ஈட்டுகின்றனர். அடுத்தபடியாக உற்பத்தி துறையில் இருக்கும் பெண்கள் ஆண்களைவிட 24 சதவீதம் குறைவான வருமானத்தை ஈட்டுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஆய்வில் பெரும் அதிர்ச்சித்தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. கீழ்நிலை தொழிலாளர்கள் மத்தியில் ஆண்கள் பெண்கள் இடையே ஊதிய வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. அதேசமயம் நடுநிலை தொழிலாளர்கள் மத்தியில் ஆண்களைவிட பெண்கள் 20 சதவீதம் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். மேலும் உயர்நிலையில் பணிபுரிபவர்கள் மத்தியில் ஆண்களைவிட பெணள் 30 சதவீதம் குறைவான ஊதியம் பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.