
ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டம் கங்காத்தலையில் உள்ள சோடலதூதா கிராமத்தில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த கௌதம் கராசியா என்பவரும் தனது குடும்பத்துடன் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவத்தின் மீது உள்ள அதீத ஈடுபாடு காரணமாக, தனது கிராமத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் தேவாலயம் ஒன்றைக் கட்டினார். அதன் பின்பு கௌதம் கராசியாவே தேவாலயத்தின் பாதிரியாராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கௌதம் கராசியா மற்றும் அவரது குடும்பம் உள்பட கிராமத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாய் மதமான இந்து மதத்திற்கே சுய விருப்பத்துடன் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே கௌதம் கட்டிய தேவாலயம் தற்போது இந்து கோவிலாக மாற்றப்பட்டு இருக்கிறது. தேவாலயம் முழுவதும் காவி சாயம் பூசப்பட்டு, சிலுவைகள் அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேவாலயம் முழுவதும் இந்து மதம் தொடர்பான சின்னங்கள் வரையப்பட்டு, தேவாலயத்தில் இந்து கடவுளான பைரவரின் சிலை பிரதிஷ்டி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தேவாலயத்திற்கு பாதிரியாராக இருந்த கௌதம் கராசியாவே பைரவர் கோவிலுக்கும் பூசாரியாகவுள்ளார். ஊர் மக்கள் ஒரு மனதாக எடுத்த முடிவின் காரணமாக தேவாயலம் கோவிலாக மாற்றப்பட்டு நேற்று முதல் ஸ்ரீ ஸ்ரீ ராம் கோஷத்துடன் பூஜைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.