Skip to main content

என்.ஐ.டி-க்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு!

Published on 16/08/2017 | Edited on 16/08/2017
என்.ஐ.டி-க்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு!

ஐஐடிக்களைத் தொடர்ந்து என்.ஐ.டி-க்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை அதிகரிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. 



தேசிய தொழில்நுட்ப நிறுவனம் என அழைக்கப்படும் என்.ஐ.டி-க்களில் பெண்கள் சேர்க்கை இந்த ஆண்டு குறைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஐஐடி-க்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு என்.ஐ.டி-க்களில் பெண்களின் சேர்க்கை விகிதம் 15%-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 22%-ஐ விட 7% குறைவாகும். முன்னதாக சேர்க்கை விதிமுறைகளில் ஜே.இ.இ. எனப்படும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் 40% சேர்க்கப்பட்டு வந்தது. இதனை மத்திய அரசு நீக்கியிருப்பதே சேர்க்கை வீழ்ச்சிக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ. எனப்படுவது என்.ஐ.டி-க்களில் சேர்ந்து பி.டெக் படிப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஆகும்.

கடந்த பல ஆண்டுகளாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆண்களை விட சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக முதலில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து பல என்.ஐ.டி-க்களின் இயக்குனர்கள் மத்திய அமைச்சகத்தில் இதுகுறித்து விவாதத்தை ஏற்படுத்தியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டின் மாறுதல்கள் ஆண் மாணவர்களின் இடங்களில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாடு முழுவதும் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 17,000 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இவற்றில் பெண்களின் சேர்க்கை 3,900. இது இந்தாண்டு 2,500-ஆக குறைந்துள்ளது. இதே காரணங்களால் இதற்குமுன் ஐஐடிக்களில் பெண்களுக்கு 20% கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்