பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக எட்டு பேர் அன்றிரவே போலீசாரிடம் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று பேரை கூடுதலாக போலீசார் கைது செய்தனர். அதன்படி, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14 ஆம் தேதி அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நாளுக்கொரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் மற்றும் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாகக் கூறி போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர். மலர்கொடி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மூன்றாவது மனைவி எனத் தெரியவந்துள்ளது. தோட்டம் சேகர் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு அதிமுக மேடையில் பாடகராக அறியப்பட்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன், தோட்டம் சேகரை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் தலைமையிலான டீம், கொலை செய்தது.
அதற்கு பழிக்குப்பழியாக கடந்த 2021-ஆம் ஆண்டு மயிலாப்பூர் சிவக்குமார், அசோக்நகரில் வைத்து கொலை செய்யப்பட்டார். சட்டப் படிப்பு முடித்த மலர்க்கொடிக்கும் தாதாவான தோட்டம் சேகருக்கும், அழகர் ராஜா மற்றும் பாலாஜி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தோட்டம் சேகர் கொலை செய்யப்பட்டபோது, சிறுவர்களாக இருந்த மகன்களுக்கு தினமும் பழிவாங்கும் சிந்தனையை ஊட்டி, அவர்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த மயிலை சிவக்குமாரை கொலை செய்துள்ளனர் என்ற தகவலும் உலாவுகிறது. அதாவது கணவர் படுகொலைக்காக 20 ஆண்டுகள் காத்திருந்து மகன்கள் மூலம் பழி தீர்த்தவர்தான் தற்போது சிக்கியிருக்கும் மலர்கொடி எனச் சொல்லப்படுகிறது. இதற்காக மலர்கொடி டீமுக்கு 50 லட்சம் ரூபாய் வரை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பணம் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்தத் தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது. இருப்பினும், எதற்காக, யாரால் இந்தக் கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல இந்த வழக்கில் ஆற்காடு சுரேசிற்கு மிகவும் வேண்டப்பட்ட வடசென்னை பா.ஜ.க மகளிரணியில் முக்கிய பொறுப்பிலிருக்கும் பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலை மீதும் போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்து பின்னர், அவரை திருமணமும் செய்து கொண்டவர் அஞ்சலை. சென்னையில் 2019-ஆம் ஆண்டு அஞ்சலையை 'ரகசியமாக' சந்திக்க வந்த போதுதான் ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கினார். தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியானபோது, கடுமையான விமர்சனங்களை தமிழக பாஜக எதிர்கொண்டது. இந்த நிலையில் தற்போது அஞ்சலை தலைமறைவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரைத் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஏற்கனவே திருநின்றவூர் பாஜக நிர்வாகி செல்வராஜை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தற்போது அஞ்சலையைக் கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார். எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.