'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று சொன்ன காலத்தில் கல்வியே அழியாச் செல்வம் என்று கல்லூரி சென்று மருத்துவம் படித்து முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்தார். அதன் பிறகு எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையில் பெண்கள் நுழையாத துறைகள் இல்லை என்ற அளவில் உள்ளது.
பெண் போராளி முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பெண் நடத்துநர்கள் வாரிசு அடிப்படையில் 2 பேருக்கு கடந்த வாரம் அரசு பேருந்தில் பணி ஆணை வழங்கி இருக்கிறார்கள் அமைச்சர்கள். இதில் ஒரு பெண் நடத்துநர் கௌரீஸ்வரி (வயது 28).
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அரசுப் பேருந்து நடத்துநராக இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 2008 ல் உயிரிழந்தார். சந்திரசேகரின் மறைவுக்கு பின் அவரது மனைவி கூலி வேலை செய்து கௌரீஸ்வரி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி மகளையும் படிக்க வைத்தார்.
பள்ளிப் படிப்பை முடித்த மூத்தபெண் கௌரீஸ்வரி பி.காம், மற்றும் டேலி படித்துவிட்டு தன் தந்தையின் வாரிசு வேலை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து விட்டு நடத்துநர் லைசன்ஸ்சும் எடுத்திருந்தார். தற்போது வாரிசு அடிப்படையில் கௌரீஸ்வரி நடத்துநர் வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பயிற்சிக்காக தினம் ஒரு நகரப் பேருந்தில் பணி செய்யும் கௌரீஸ்வரியை பேருந்தில் வைத்து சந்தித்தோம்..
ரொம்ப வறுமையான குடும்பம். 2008-ல் அப்பா இறந்ததும் என்ன சொல்றதுனே தெரியாம இருந்த எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சாங்க. என் தங்கச்சி மாற்றுத்திறனாளி அவளையும் பார்த்துக்கனும், கூலி வேலைக்கும் போகனும் இப்படித்தான் என்னை படிக்க வச்சாங்க. சில வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. என் கணவர் சுமை தூக்கும் தொழிலாளி.
நான் திருமணமானதும் எங்க அம்மா, தங்கையை தனியாக விட முடியாதுன்னு என் கூடவே கூட்டி வந்து வைத்து பார்த்துக்கிறேன். இந்த நேரத்தில் தான் உங்க அப்பா பார்த்த வேலைக்கு கருணை அடிப்படையில் உனக்கு வேலை கிடைக்கும் விண்ணப்பம் கொடுன்னு சொன்னாங்க. நானும் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்தேன். இப்ப நடத்துநர் வேலை கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருக்கு. அலுவலகத்திலும், கூட வேலை செய்ற அண்ணன்களும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. முதல்ல பஸ்ல எப்படி நின்னு டிக்கெட் கொடுக்கனும் என்றும், நம் பாதுகாப்பு முக்கியம் என்றும் அக்கறையா சொல்லிக் கொடுக்கிறார்கள்.
முதலில் 30 நாள் தினமும் பயிற்சிக்காக ஒவ்வொரு பஸ்லயும் போகச் சொல்றாங்க. இது புது அனுபவமாக உள்ளது. பயணிகளும் என்னைப் பார்த்ததும் ரொம்ப நட்பா பேசி பழகுறாங்க. வாழ்த்துகள் சொல்றாங்க, பாராட்டுறாங்க பலர் செல்ஃபி கூட எடுத்துக்கிட்டாங்க. சில நாட்கள் தனியா வர பயந்து அம்மாவையும் துணைக்கு அழைத்து வந்து பஸ்ல கூட்டி போவேன். ஆனா இப்ப அந்தப் பயம் போயிடுச்சு. இனி எனக்கு பயமில்லை.
நடத்துநர் பணி மட்டும் இல்லை அலுவலகத்திற்குள் எந்தப் பணி என்றாலும் செய்ய தயாரா இருக்கேன் என்றார்.
நாமும் வாழ்த்துகள் கூறி முடிக்க, ''எல்லாரும் டிக்கெட் வாங்குங்க, படியில நிக்கிறவங்க மேல ஏறி வாங்க'' என்று நடத்துநர் பணியை தொடங்கினார் புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் கௌரீஸ்வரி.