தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சூரல்மலா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மீட் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பெரும் தாக்கத்தை வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேரிடர் சம்பவத்தின் மீட்புப் பணிகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது விபத்தில் பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய உறவுகளை இழந்துள்ளனர். உறவுகளை இழந்து மனரீதியாக தவிக்கும் மக்களை தேற்ற வேண்டியுள்ளது என்ற கருத்தை முன் வைத்திருந்தார். அதேநேரம் கேரளாவிற்கு மக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வேண்டுகோளையும் வைத்திருந்தார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அந்த பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி இன்னும் பலர் மீட்படாத நிலையில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு உள்ளனரா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாமல் பலர் தவிக்கும் சூழல் நீடித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் நிர்கதியாய் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உறவுகளை இழந்து வாடும் குழந்தைகள் மனஅழுத்தத்துடன் இருப்பதால் அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு சாதனங்கள் தேவைப்படுவதாக வயநாடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கேரம் போர்டு, கிரையான் பென்சில், ஓவிய புத்தகங்கள், பொம்மைகளை குழந்தைகளுக்காக அனுப்பி வைக்கலாம். செஸ் போர்டு, கதை புத்தகங்கள், பந்து உள்ளிட்டவற்றையும் குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கலாம் என கோரிக்கை வைத்துள்ளார் வயநாடு மாவட்ட ஆட்சியர்.