கரோனா ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் சாலை ஓரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத சூழலில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதில் பலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலையும் நிலவி வருகிறது. இம்மாதிரியான ஆபத்தான பயணங்களால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் கரோனா ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் சாலை ஓரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அனிதா பாய் என்ற பெண் தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வேலை இல்லாததால், அன்றாடச் செலவுகளுக்குக் கஷ்டப்பட்டுவந்த இந்தக் குடும்பம் நடைபயணமாகத் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தது. இதனையடுத்து கர்ப்பிணிப் பெண்ணான அனிதா பாய் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவாக இந்தக் குடும்பம் ஹைதராபாத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் நேற்று ஜப்தி சிவனூர் என்ற கிராமத்தின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, அனிதா பாய்க்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வாகனம் எதுவும் கிடைக்காத நிலையில், அவருடன் வந்த மற்ற பெண்களே சேர்ந்து சாலையோரத்தில் பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் சில உள்ளூர் வாசிகள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்க, அதன்பிறகு அங்கு வந்த காவல்துறை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெண்ணையும், குழந்தையையும் ராமாயம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 70 கிலோமீட்டர் நடைப்பயணத்திற்குப் பிறகு சாலை ஓரத்தில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது, தொழிலாளர் நலனுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.