Skip to main content

ஆபாச படங்கள் அதிகம் பார்த்த கணவன்; மனைவியால் மாறிய வாழ்க்கை - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 33

Published on 25/07/2024 | Edited on 26/07/2024
jayzen manangal vs manithargal- 33

ஆபாச படங்கள் அதிகமாக பார்த்ததால், மனைவியிடம் நாட்டம் காட்டாத ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.  

திருமணம் ஆன பெண்மணி ஒருவர் கவுன்சிலிங் வந்திருந்தார். திருமணம் ஆகி இருவருக்கும் ஏழு வருடம் ஆகியிருந்தது. முதல் மூன்று வருடங்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறது. சரியாக நான்காவது வருடத்தில் இருந்து நன்றாக இருந்த கணவர், ஒரு மாதிரி தன்னிடமிருந்து ரொம்ப விலகி இப்போது இருவருக்குள் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது என்றார். பொருளாதார ரீதியாகவும் ஒரு பிரச்சனையும் இல்லை, சமூகத்தில் நல்ல பெயர் இருக்கிறது. எந்த பெண்களிடமும் தொடர்பும் இல்லை. ஆனால் ஏன் இப்படி வெறுத்து விலகி இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார். அவரிடமும் கேட்டபோது தெரிய வில்லை. முன்பு மாதிரி இல்லை என்று அவரே சொன்னதாக சொன்னார். 

ஆனால் ஒரு முறை அவருடைய செல்போனை எதார்த்தமாக பார்க்கும் போது நிறைய ஆபாச படங்களைப் பார்த்ததன் சர்ச் ஹிஸ்டரியைக் கவனித்தேன். என்னிடம் சொன்னதையும் அதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது. எனக்கு கொஞ்சம் புரிந்தது. என்னிடம் பிடித்தம் குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் இப்படி வீடியோஸ் பார்க்கிறார். அவரிடம் சொல்லாமல் நானும் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்படியே இருந்தால் அது கண்டிப்பாக விவாகரத்தில் தான் முடியும் என்று தோன்ற இந்த நிலையில் வந்திருந்தார். நான் கணவரைப் பேசி வர வைக்க முடியுமா என்று கேட்டேன். நடந்ததை சொல்லி மொபைல் ஃபோனை பார்த்தேன் இதுதான் பிரச்சனை இதனை சரி செய்தால் இரண்டு பேரும் சேர்ந்து வாழலாமே. ஏன் யோசிக்க கூடாது என்று பேசி கூட்டி வாருங்கள் என்றேன். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறது. கணவர் இரண்டு மூன்று நாள் டைம் எடுத்துக்கொண்டு யோசித்து விட்டு, இதைச் சரி பண்ணி தான் ஆக வேண்டும் என்று அவர் முடிவு எடுத்து வந்தார்.

அவரிடம் கவுன்சிலிங்கில் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்க அவர் மனைவி சொன்னது போலவே மூன்று நான்கு வருடமாக தான் என்றார். ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்து ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்குள் இதை பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றுகிறது என்றார். அதிலேயே ஸ்டிரஸ் ஃப்ரீ ஆகி வேண்டிய மன நிம்மதி கிடைத்து விடுவதால் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வருவதில்லை. மனைவிக்கு தெரிந்தது முதலில் தனக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், வெளிவந்தது நல்லது தான். இதை சரி செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவரே முன்வந்தார். 

முதல் விஷயமாக அவருக்கு நான் புரிய வைத்தது. நீங்கள் பார்ப்பது ஒரு ஆணும் பெண்ணும் இல்லை. மொபைல் போனில் நீங்கள் பார்ப்பது வெறும் பிக்சல்ஸ். நீங்கள் அது கூட செலவழிக்கும் நேரம் மனிதர்களோடு செலவழிக்கும் நேரத்தை விட அதிகமாகிறது என்றால் நீங்கள் ஒரு மனிதரே இல்லை இந்த மெஷின் போன்றவர்கள் என்றேன். உங்களுக்கு இனிமேல் நகைச்சுவை, சிரிப்பு, அழுகை என எதுவுமே வராது. உங்களிடம் இருக்கும் ஒரே விஷயம் உச்சகட்ட மகிழ்ச்சி அடைவது தூங்குவது மட்டும் தான் உங்களிடம் இருக்கும்.  நீங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. இந்த மாதிரி வீடியோஸ் பார்ப்பதினால் இருக்கும் பின்னணி உங்கள் ஈகோ தான். மனைவி, உறவுகள், பிள்ளைகள் என்று எல்லாம் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் அனுசரிப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியாது. மற்றவர்களும் உங்களால் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் வீடியோஸ் பார்ப்பதால் நீங்கள் மட்டுமே சந்தோஷம் அடைய முடியும். அதனால் நீங்கள் ஒரு ஈகோயிஸ்டிக் ரோபோ தான் என்றேன். 
 

அவர் குற்ற உணர்ச்சியாக உணர்ந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீங்கள் இந்தப் பழக்கத்திற்கு வந்தாக வேண்டும் எனவே தான் உங்களால் வேறு எங்கேயும் பொது இடத்தில் கலந்து கொள்ளவும் முடிவதில்லை. வீடியோஸ் பார்க்க நேரம் ஒதுக்க முடியாது போய்விடும் என்பதால் தான் நீங்கள் மனிதர்களை ஒதுக்குகிறீர்கள். தனியாக இருக்கிறீர்கள் என்றேன். கவுன்சிலிங் பொறுத்தவரை ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் மனநிலையை பற்றிப் பேச வேண்டும். அது பேசினாலே நடந்திருக்கும் தற்போதைய பிரச்சினை தானாக சரியாகிவிடும். அவர் ஒன்றும் பேசாமல் அந்த செஷன் முடிந்த உடனே போய் கிளம்பி விட்டார். ஒரு வாரம் கழித்து அவர் மனைவி என்னைக் கூப்பிட்டார் நீங்கள் என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை ஆனால், இப்பொழுது இவரிடம் வேறு ஒரு மாற்றம் தெரிகிறது. ஆனால் போனில் பார்த்தால் வீடியோஸ் பார்ப்பது போல ஹிஸ்டரியும் இல்லை. ஒருவேளை அவர் அதை அழித்திருக்க வேண்டும். இல்லை என்றால் உண்மையாவே பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் என்றார். அடுத்த ஒரு மாதம் கழித்து இருவருமே கணவன் மனைவியாக ஒன்றாக வந்து என்னை சந்தித்து ரொம்ப மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.