கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நிறுவனம் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.10 கோடி கடன் பெற்றிருந்தார்.
இதையடுத்து முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014-ல் ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்த நிலையில் அது பணமின்றி திரும்பியது. பின்பு சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் முரளி மனோகர் மீது அபிர்சந்த் நஹாவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர்சந்த் நஹாவருக்கு முரளி மனோகர் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முரளி மனோகருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து முரளி மனோகர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. இது தொடர்பாக அபிர்சந்த் நஹர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் முரளி மனோகரின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி, முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், முரளி மனோகர் தரப்பில் ஏற்கனவே 8 கோடியே 99 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, மீத கடன் தொகையான ரூ1 கோடியே 1 லட்சத்தை 4 வாரங்களில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண்ணை குறிப்பிட்டு டெபாசிட் செய்ய வேண்டும். நான்கு வாரங்களில் இந்த தொகையை செலுத்தாவிட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தானாக ரத்தாகி விடும் என்றும், சிறை தண்டனை தொடர்பாக விசாரணை நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.