Skip to main content

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆபத்து; சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு!

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
 Kanchipuram Corporation Mayor's post in jeopardy; Opposition from own party!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என ஆளும் திமுகவுக்கு மக்கள் ஆதரவு தொடர் வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் மணி மகுடம் சூடப்போகும் நாளை எதிர்பார்த்து திமுகவினர் கொண்டாடி வரும் அதே வேளையில், சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் நெல்லை மற்றும் கோவை மேயர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்ய, அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவர, திமுக உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்கள். மேலும் 10 திமுக கவுன்சிலர்கள் நிலைக் குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேயரை மாற்றக் கூறி மாவட்ட செயலாளர் ஆன சுந்தரிடம் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, மேலும் துறை அமைச்சரான கே.என்.நேருவிடம் சமாதான பேச்சு நடைபெற எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்த நிலையில் மேயருக்கு எதிராக வரும் ஜூலை 29ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளனர்.

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/confusion-over-secretary-general-issue-will-soon-be-resolved-comment-by
கவுன்சிலர் ராமகிருஷ்ணன்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகள் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர், மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக மேயராக பதவி ஏற்க கட்சியின் சீனியரான ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா, சோபன் குமாரின் மனைவி சூர்யா, பெரும் செல்வந்தரான எஸ்கேபி சீனிவாசன் மனைவி சாந்தி மற்றும் யுவராஜ் மனைவி எம்பிஏ பட்டதாரியான மகாலட்சுமி ஆகியோருக்கு இடையில் மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது, இந்த நிலையில் மா.செ ஆதரவுடன் தலைமையில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, திமுகவை சேர்ந்த கவுன்சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததின் பின்னணியை பற்றி விசாரித்தோம்"18-வது வார்டு கவுன்சிலரான மல்லிகாவின் கணவர் ராமகிருஷ்ணன் "மேயரா பதவி ஏற்பதற்கு முன்னாடி இருந்த மாதிரி இல்ல, ரெண்டு வருஷம் முடிஞ்சு எந்த அடிப்படை வசதியும் செய்யல, என்னோட வார்டு பஸ் ஸ்டாண்ட் சுத்தி ரோடு சரி இல்லை, மதுராந்தோட்டம் பகுதியில கழிவு நீர் பிரச்சனை சீர்படுத்தவில்லை. மின்விளக்கு மாற்றி தரம் இல்லாத எல்இடி ஊழல், மஞ்சள் நீர் கால்வாய் சீரமைப்புல முறைகேடு, மொத்தத்துல மாநகராட்சி நிர்வாகம் சரி இல்லை. மக்களிடையே கெட்ட பேரு தான். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமாரகுருவிடம் பேசினோம் "மகாலட்சுமி மேயரா பதவி ஏற்றதில் இருந்து யாரையும் மதிப்பதில்லை, கௌர குறைவாக நடத்துறாங்க என்னோட வார்டு உட்பட 22 திமுக கவுன்சிலர்கள் வார்டுலையும் அடிப்படை வசதியே செய்து தரல என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/confusion-over-secretary-general-issue-will-soon-be-resolved-comment-by
துணை மேயர் குமரகுரு

மேயராக உள்ள மகாலட்சுமியை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு உங்கள் சித்தி சாந்திசீனிவாசனை பதவியில் அமர்த்த நீங்கள்தான் தூண்டுகிறீர்கள் என்று கூறுகிறார்களே.? என்ற கேள்வியை 48வது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கிடம் கேட்டோம் "வரி பதிவேடு, எல்.ஈ.டி விளக்கு முறைகேடு, ஆரம்பிச்சு கிச்சனுக்கு அப்ரூவ்டுக்கு 40000 வசூல் செய்யறாங்க ஒரு கோடியே 82 லட்சம் வரி தள்ளுபடில முறைகேடு, மேயர் கணவர் யுவராஜுக்கு வேண்டப்பட்ட வேல்முருகன் கழிவு நீர் மற்றும் குடிநீர் பணியில் எடுத்து செய்கிறார்,  பிரகாஷ் மேயர் பி.சி என்ற பெயரில் வசூல் செய்கிறார், கிரி கட்டிட மறுசீரமைப்பு என்ற பெயரில் 60 லட்சத்துல பணி செய்கிறார், பழனி மேயர் கணவர் யுவராஜ்  தம்பி, எம்.எஸ் பாண்டியன், தசரதன் இவர்களுக்கெல்லாம் மாநகராட்சியில் என்ன வேலை கவுன்சிலராக இருந்து நாங்க தலையிடக் கூடாதா, ஆனா இவங்க வசூல் வேட்டை செய்வாங்க மக்கள் கிட்ட கெட்ட பேரு தான் வாங்கிட்டு இருக்கோம், அதனாலதான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு இருக்கோம், இதையெல்லாம் தட்டிக் கேட்டால், மேயர் பதவிக்கு நாங்க ஆசைப்படுறதா என் மேல வீண் பழி போடுறாங்க என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

உண்மையாகவே காஞ்சிபுரம் மாநகராட்சியில் என்னதான் நடக்குது என்று விஷயத்தைப் பற்றி பெயர் கூற விரும்பாத நபர் நம்மிடம் பேசினார்" மேயர் கணவர் யுவராஜ் எதிராக  திமுக மாநகராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன், குமாரகுரு, கார்த்தி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுவதாகவும், இதற்கு முக்கிய காரணம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேரும் குப்பைகளை அகற்றும் டெண்டரை தமிழ்ச்செல்வன், எஸ்.கே.பி.கார்த்தி, எம்.எஸ் சுகுமார், பில்லோபாங் ராதாகிருஷ்ணன், துணை மேயர் முத்து செல்வன் ஆகியோர் இணைந்து  இந்த டென்டரை எடுத்துள்ளனர். 

Kanji
மேயர் கணவர் யுவராஜ்

முன்பை போல வேலையாட்கள் மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் அமர்த்தி குப்பைகளை சேகரிப்பதில் முறைகேடு ஏற்படுவதால், அந்த முறையை மாற்றி தற்போது குப்பைகளை சேகரித்து அதை பிளாஸ்டிக், இரும்பு, பாட்டில் போன்றவை தனித்தனியாக பிரித்து அதற்கு கிலோக்கு ஏற்ப பில் வழங்கப்படும், இந்த செயல்முறையால் எதிர்பார்த்த அளவு இவர்களுக்கு அதில் வருமானம் கிடைக்கவில்லை, மேலும் மாநகராட்சி ஆணையர் குப்பைகள் தேங்கி இருந்தால் அதற்கான அபராதமும் விதிக்கிறார், இதற்கு காரணம் மேயர் என்று அவர் மீது இந்த கோபம் திரும்பி உள்ளது, கடந்த ஆறு மாதங்களாக மேயருக்கு எதிரான செய்திகளும், முறைகேடு புகார்களும் எழுந்த நிலையில், தற்போது அது முற்றி நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை வந்துள்ளது, மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்காக பணிக்காக உலக வங்கி சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அதில் பெரிய தொகையை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த எதிர்ப்பு அலைகள் மேயருக்கு எதிராக திரும்பி உள்ளது.

மேற்கு எதிரான நம்பிக்கையா தீர்மானம் பற்றி காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜிடம் பேசினோம்"காஞ்சிபுரம் மக்கள் மற்றும் தலைமை எங்களை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்து உள்ளனர், அந்த நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவோம் ,தவறான புரிதலால் எங்களுக்கு எதிராக திரும்பி உள்ளது நல்ல முறையில் அந்த தவறான புரிதலை புரிய வைத்து மீண்டும் மக்கள் பணியை தொடருவோம். 

வரும் ஜூலை 29ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுக உட்பட கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 33 கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கை எல்லா தீர்மானம் நிறைவேற்ற என்பது சதவீதம் ஆதரவு இருந்தால் மட்டுமே மேயரை நீக்க முடியும் என்பதால் நூல் இழையில் மேயர் பதவியை மகாலட்சுமி யுவராஜ் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.