கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வரை சுமார் ரூ.126 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள புளியமரம் மற்றும் காட்டுவாகை மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மைலாம்பாறை பேருந்து நிலையம் அருகே இருந்த 50 ஆண்டுகால பழமையான ஆலமரம் ஒன்றை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றத் திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வடசெட்டிந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், சமூக ஆர்வலருமான மைலாம்பாறை மாரி என்பவர் ஆலமரத்தை அகற்றுவது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எங்கள் ஊரில் நெடுஞ்சாலையில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் மையிலம்பாறை என்னுமிடத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இதன் நிழல் மனிதர்களுக்கும் மட்டுமல்ல பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக இந்த மரத்தை வெட்ட ஒப்பந்ததாரர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் முயல்கிறார்கள். ஆனால் சாலை விரிவாக்கத்துக்கு மரத்தின் கிளையை வெட்டினாலே போதுமானதாகும். மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர் உள்ளிட்டிருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எஸ்.வி.கங்காபூர்வாளா, நீதிபதி சத்திய நாராயண பிரசாந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “சாலை அமைப்பதற்காக எத்தனை மரங்களை வெட்ட உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், “ஒரே ஒரு மரத்தைத்தான் வெட்ட உள்ளனர்” என்பது பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள், “சாலை விரிவாக்கம் என்பது அவசியமானது அதே நேரம் இந்த ஆலமரத்தை வேரோடு எடுத்து அருகே உள்ள இடத்தில் நட முடியுமா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து மரத்தை வேறு ஒரு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதிகள் அமர்வு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். மேலும், விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10 டன் எடை கொண்ட ஆலமரத்தை நெடுஞ்சாலைத் துறையினர் இரண்டு நாட்கள் போராடி சுமார் 4 ராட்சத கிரேன்கள் மூலம் பாதுகாப்பாகத் தோண்டி எடுக்கப்பட்டது. பின்பு, சுமார் ஒரு கிலோ மீட்டர் கிரைன்கள் மூலம் தூக்கித் தள்ளியபடியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி- சங்கராபுரம் செல்லும் சாலை அருகே நெடுஞ்சாலை துறையினுக்குச் சொந்தமான இடத்தில் 10 அடி ஆழம் தோண்டப்பட்டு ஆலமரம் நன்கு வளர உரங்கள் போடப்பட்டும் பூச்சிகள் அரிக்காமல் இருக்க மருந்துகள் தெளித்தும் அந்த ஆலமரத்தை பாதுகாப்பாக நட்டனர். சுமார் 50 ஆண்டுகால ஆலமரத்தை அடியோடு எடுத்து அதனை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி நடப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.