உலகின் சிறந்த கல்வி முறையை கொண்ட நாடான பின்லாந்து, “சமத்துவம் நிறைந்த சமூகங்களில் மாணவர்கள் நன்றாக பயில்கிறார்கள்” என்கிறது. ஆனால் நாம் சமத்துவம் என சொல்லிக்கொண்டு பொருளாதாரம் உள்ளவர்களுக்கு ஒரு வித கல்வியையும், பொருளாதார நலிவுற்றவர்களுக்கு ஒரு வித கல்வியையும் வழங்கி வருகிறோம். இது போன்ற சமத்துவமற்ற நிலை கல்வி முறையில் இருக்கும் காரணத்தினாலே பல சிக்கலை நாம் கையாள வேண்டியுள்ளது.
இந்த நிலையில்தான் தனியார்க் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்துள்ள தகவல் வெளியாகி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 480 தனியார் கல்லூரிகள் உள்ளது. அதில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே பெயரில் 972 இடங்களில் பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர் ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசிரியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால், அது சட்டப்படி மோசடி. இந்த முழுநேர பேராசிரியர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தே அக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான அனுமதியே வழங்கப்படுகிறது.
அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை சி.ஏ.ஐ. பிரிவு ஆய்வுக்காக செல்வது வழக்கம். அதில் ஒரு பாட பிரிவுக்கு 1:2:6 எனும் விகிதாச்சாரப்படி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியாற்றுகிறார்களா?, அந்த கல்லூரியில் போதுமான லேப் இருக்கின்றதா? அதில் இருக்கும் பேராசிரியர்கள் பி.எச்.டி முடித்தவர்களா? அப்படி என்றால் எந்தக்கல்லூரியில் முடித்தவர்கள்? அவர்களின் யூனிக் ஐடி சரியாக உள்ளதா? என்கிற முழு விவரங்ளையும் சரிபார்த்த பிறகே அந்த வருடத்திற்கான மாணவர்கள் சேர்கைக்கு அனுமதி அளிக்கப்படும் . அதன்படி 2023 - 2024 ஆண்டிற்கான சி.ஏ.ஐ. இயக்குநர் இளையபெருமாள் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ததில் தகுதியற்ற கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
அப்படி அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராக பணிபுரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் முரளிபாபு, காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வராவில் தொடங்கி திண்டுக்கல் எஸ்.பி.எம். கல்லூரி, தஞ்சாவூர் கே.எஸ்.கே. கல்லூரி, பி.எஸ்.என். திருநெல்வேலி, அன்னை மாதம்மாள் நாமக்கல், ஆதித்தியா கோவை வரை 13 கல்லூரிகளிலும், மாரிச்சாமி என்பவர் சென்னை மீனாட்சி கல்லூரி தொடங்கி காஞ்சிபுரம் ரேஸ் கல்லூரி, கதிர் கோவை வரை 11 கல்லூரிகளிலும், வெங்கடேசன் ஸ்ரீமுத்துகுமரன் காஞ்சிபுரம் தொடங்கி நாமக்கல் செல்வம், சேலம் பாரதியார், கோவை ஈசா , மரியா கன்னியாகுமாரி வரை 10 கல்லூரிகள் என அடுத்தடுத்து பட்டில் நீளுகிறது.
அனைத்து தனியார் கல்லூரிகளும் அரசியல் பின்புலம் உள்ளவர்களால் இயக்கப்படும் நிலையில், இந்த லிஸ்ட்டில் உள்ள போலி பேராசிரியர்ளுக்கான யூனிக் ஐடி மாற்றி அவர்கள் இருப்பது போலவே கல்லூகளுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக தெறியவந்துள்ளாது. தற்போது இந்தாண்டிற்கான மே, ஜூன் மாதத்தில் இதே போல ஆய்வு நடத்தப்பட்டதிலும் இதை விட கூடுதலாக உள்ளதாகவும், இந்த பிரச்சனை காரணமாகவே அதனை தற்போது நிறுத்திவைத்துள்ளாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் கூறுகையில், “இதில் முழுக்க முழுக்க கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுதான் முதன்மையாக நிற்கிறது. கல்லூரி நிர்வாகம் அவர்களின் தேவைக்காகவும், பணத்திற்காகவும் இது போன்று மோசடி செய்கின்றன. அதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாலே இது போன்ற குற்றம் நடைபெறுகிறது. உடனடியாக விசாரித்து கல்லூரி நிர்வாகம், அதன் உரிமையாளர்கள், பேரசிரியர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் வேல்ராஜிடம் கேட்ட போது, “இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள 295 கல்லூரிகளின் முழு விவரங்களையும் கேட்டுள்ளோம். அதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காலஅவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் விவரங்களை வைத்து, தவறு செய்த பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக சி.ஏ.ஐ. பிரிவில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது கமிட்டி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்” என்றார்.
இது போன்று தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே பேராசிரியர்களை போலியாக பயன்படுத்துவதில்லை; தனியார் கலைக்கல்லூரிகள், தனியார் பள்ளிகள் போன்றவற்றிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.