முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகள் தன் கணவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள் என்று ஒரு தந்தை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு தொழிலதிபர் தன்னுடைய பெண் திருமணமாகி ஹனிமூன் சென்று வந்ததிலிருந்து கணவன் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே இருக்கிறாள் காரணம் கேட்டாலும் சொல்வதில்லை என்னவென்று கண்டுபிடித்து சொல்லுமாறு என்னிடம் வந்து கேஸ் கொடுத்தார். பெரும்பான்மையான வழக்குகளை போல கணவனுக்கு வேறொரு தொடர்பு இருந்திருக்கலாம் என்று யூகித்து அந்த பெண்ணின் கணவனை பின் தொடர்ந்தோம். ஆனால், மாதக் கணக்காகியும் அவரை பற்றி எங்களுக்கு ஒரு தப்பான தகவலும் கிடைக்கவில்லை.
பையனிடம் அதற்கு மேல் தவறில்லை என்று புரிந்ததும் பெண்ணின் அப்பாவை அழைத்து பெண்ணை கவனிக்க வேண்டும் எனவே அவரது குடும்ப நண்பர் போல அவரது வீட்டிற்கு சென்று பார்க்க வருவதாக தகவல் சொல்லி சென்றோம். திருமணத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லி கிப்ட்டுடன் எனது பிள்ளைகளுடன் நான் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். எல்லாரிடமும் சாதாரணமாக குடும்ப நண்பர் போல பேசிவிட்டு யாரும் அருகில் இல்லாத போது அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து பார்த்தேன். என்ன ஆயிற்று ஏன் கணவன் வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்க அவள் இல்லை போகவில்லை. ஒன்றும் ஒத்துவரைவில்லை இங்குதான் இருக்கப் போகிறேன் என்று சொன்னாள்.
அதற்கு மேல் புது நபர் என்பதால் என்னிடம் அவள் பகிர முடியாது என்று அதற்கு மேல் கேட்பது சரியாக இருக்காது என்று அடுத்து பார்க்கலாம் என்று வந்து விட்டோம். வரும்போது ஏதாவது பிரச்சனை ஏதாவது உதவி வேண்டுமானால் ஆன்ட்டிக்கு கூப்பிடுமா என்று என் நம்பரை கொடுத்து விட்டு தான் வந்தேன். பத்து நாட்கள் கழித்து தான் அந்த பெண் என்னை அழைத்து பேச வேண்டும் என்றாள். சந்தித்து பேசியபோது என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றாள். திருமணம் ஆகி இரண்டு மாதம் தானே ஆகிறது. என்ன காரணம் என்று முதலில் காரணம் கேட்டபோது சொல்ல முடியாது என்று தயங்கினாள். நீ சொல்லுவதில் முக்கியமான காரணம் இருந்தால் விவாகரத்து வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன் என்று மெல்ல மெல்ல உறுதி அளித்த பின் தான் சொல்ல ஆரம்பித்தாள். காரணம் என்னவென்றால் அவள் தன் கணவனை, அமெரிக்காவில் இருக்கும் தன் தோழியின் கணவருடன் ஒப்பிட்டு அவர்களின் வாழும் முறை போல எதிர்பார்த்த அளவுக்கு தன் கணவர் இல்லை என்றாள்.
அந்தப் பெண்ணிற்கும் மெதுவாக எடுத்துக் கூறினேன். உன் அப்பா இப்பொழுது லட்ச கணக்கில் இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் அவருடைய திருமண வயதில் இருக்கும்போது அவருடைய சம்பாத்தியம் மிக குறைவு. அதுபோலத்தான் இப்பொழுதுதான் திருமணமாகி வாழ்க்கையை தொடங்கி இருக்கிறீர்கள். மெல்ல மெல்ல உனக்கு பிடித்தவாறு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து சொல்லி கணவனை மாற்றிக்கொள். கொஞ்சம் கொஞ்சமாத்தான் எல்லாம் மாறும். இன்னொருவருடன் கம்பேர் செய்யக்கூடாது என்று நாங்கள் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்வு பற்றியும், நிதர்சன வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றியும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன். இப்பொழுது அந்தப் பெண் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாள்.
இந்தக் காலத்தில் பிள்ளைகளுக்கு ரியாலிட்டி எது, கனவு எது என்று வித்தியாசமே தெரிவதில்லை. இன்றைய தலைமுறை பிள்ளைகள் குழந்தையிலிருந்து பள்ளி, கல்லூரி படிப்பு என்று வளரும் வரை தனித்து தனி உலகத்திலேயே இருக்கிறார்கள். எனவே வேலை பார்க்க என்று வீட்டை விட்டு போகும்போதுதான் வெளி உலகத்தை திடீரென்று பார்க்கிறார்கள். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்பு கனவு என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் வைத்திருக்கும் அளவு எல்லாம் கற்பனை தாண்டி இருக்கிறது. பெற்றவர்கள் தான், குடும்பம் என்றால் எப்படி இருக்கும், நமது கலாச்சாரம் எப்படி என்று எல்லாம் சொல்லி புரிய வைத்து வளர்க்க வேண்டும்.