சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி நேற்று (26-07-24), பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில், உலகம் முழுவதும் உள்ள 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொள்கின்றனர். இந்தியாவில் இருந்து, 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 72 வீரர்கள் புதுமுகமாக அறிமுகமாகிறார்கள்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தடகள வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார். இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், தற்போது நடைபெறுகிற ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற பிரபல வீரர் பி.வி.சிந்து, பேட்மிட்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று இந்திய மக்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர், தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக திரள்கிறார்.
குத்துச்சண்டை பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஜரீன், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற ஏஐபிஏ மகளிர் ஜூனியர் மற்றும் யூத் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பிரபல துருக்கி வீரரான உல்கு டெமிரை எதிர்த்து போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இவர், தற்போது நடைபெறுகிற ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். 50 கிலோ பிரிவில் பங்கேற்கும் நிகத் ஜரீன், குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியான மேரி கோமின் சாதனையை முறியடிப்பார் என்று விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
பேட்மிட்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கலந்துகொள்வதற்கு இந்தியாவைச் சேர்ந்த சாத்விசாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி பங்கேற்கவுள்ளனர். ஏற்கெனவே, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்ற இவர்கள், இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் வழக்கில் சிக்கிய பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சிங்கை எதிர்த்து டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், தற்போது நடைபெறுகிற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் பங்கேற்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் போகத் தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற இவர், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். பிரிஜ் பூஷன் சிங்கை எதிர்த்து மத்திய அரசு இவருக்கு வழங்கிய கேல்ரத்னா விருதை திரும்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.