தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ், புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார்.
காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், போக்குவரத்து துறையாக இருந்தாலும், குற்ற புலனாய்வாக இருந்தாலும், அதிரடிக்கு பெயர்போனவர் ஐபிஎஸ் அதிகாரியான அருண். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார். பின்னர், காவல் உடுப்பு மீதும் காவல் துறை மீதும் இருந்த தீராக் காதலால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்தார். இதையடுத்து, 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அருணுக்கு முதல் பதவியே மிகவும் சென்சிடிவ் ஏரியாவில் கிடைத்தது. நாங்குநேரி ஏஎஸ்பி ஆக தனது கேரியரை தொடங்கிய அருண், தூத்துக்குடி மாவட்டத்திலும் தனது பணியை திறம்பட செய்தார். இதன் காரணமாக அவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் அவரை பலரும் வெகுவாக பாரட்டப்படுவதற்கு வழிகுத்தது. அதன் காரணமாகவே, திமுக, அதிமுக என ஆட்சி எதுவாகினும் அங்கு துடிப்பான அதிகாரியாக அருண் கோலோச்சி வந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அனுபவங்களை பெற்ற பிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய நகரமான அண்ணாநகரின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றினார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012ல் காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று.. திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார். மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். பின் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.
2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண் ஐபிஎஸ், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. 2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். இப்படி, வாழ்விலும் பணியிலும் அடுத்தடுத்து உயரங்களைத் தொட்ட அருணுக்கு, இன்னொரு மணிமகுடத்தை திமுக அரசு சூட்டியுள்ளது. ஜூலை எட்டாம் தேதியான இன்று.. சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எவரிடமும் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக சென்னை மாநகர கமிஷனராக நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் ரவுடிகள் களை எடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து. தலைநகர் ரவுடிகள் நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.