அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள 'டவ்-தே' புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இது வடக்கு, வாடா மேற்கே நகர்ந்தும் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே வரும் செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, கேரளா, குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையின் 53 குழுக்கள் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான 16 விமானங்களும், 18 ஹெலிகாப்டர்களும் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளன.
புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையின் தென் பிராந்திய வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் கொச்சி அருகே நிவாரண முகாம்களையும் அமைத்துள்ளனர். மீனவர்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல்படை கப்பல்கள், படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 'டவ்-தே' புயல் பாதிப்பு தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
'டவ்-தே' புயல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (15/05/2021) காணொளி காட்சி மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.